Wednesday 6 January 2016

நான் ஒரு கவிஞன்



கவிதையென்றொன்றில்லை நான் எழுத
காரணம்,
நான் எழுத நினைத்த அனைத்தையும்
எழுதிவிட்டனர் கவியல்லாதவர்கள்..

காதலியே உன் மனம் பால்போல வெண்மை..
எங்கள் ஊர் போல் அழகு வேறெங்குமில்லை..
நான் கொண்ட வேதனை சொன்னால் புரியாது..
அது உலகில் இனியாருக்கும் வரக்கூடாது..
இதுபோல எழுத இனி நானில்லை
ஏனெனில் இவை அனைத்தும்
பொய்யெனத் தெரியும் அனைவருக்கும்..
இப்படி எந்நேரமும் பொய்யுரைத்த
அழகியல்வாதிகள் எல்லாம்
பொய்களை மட்டுமே உரைப்பதால்
அரசியல்வாதிகள் ஆகிவிட்டனர்..

பசிகண்டு பொறுக்கவில்லை அதனால்
அதுபற்றி பேசுவோம் என ஒன்றுகூடிய
எல்லோரும் குளிரூட்டிய கூடங்களுக்குள்
பெப்சியையும் கோலாவையும் அருந்திவிட்டு
தாகம்தீர செயற்குழுக்களிலும் பொதுக்குழுக்களிலும்
வறுமைபற்றி வெறுமையாய் விவாதிக்க,
அதைப் பின்பற்றுபவர்கள் எல்லோரும்
வியாபாரிகள் ஆகிவிட்டனர்..

ஆன்மீகத்தை அரவணைக்க
புராணங்களை விஞ்ஞானமாகவும்
விஞ்ஞானத்தை புராணங்களாகவும்
மாற்றி மாற்றி சத்தரித்து,
மற்றவர்களின் நம்பிக்கைகளை எரித்து
அதில் தங்கள் வளத்திற்காக குளிர்காய்பவர்கள்
பெரியார் சொன்னபடி
முட்டாள், காட்டுமிராண்டிகள்,
அயோக்கியர்கள் ஆகிவிட்டனர்..

உணர்வுகளைத் தூண்டுவதே
வியாபாரத்தின் யுக்தியென
தெளிவாகத் தெரிந்துகொண்டு,
அதிலும் சிறந்தது
மொழியுணர்வெனப் புரிந்துகொண்டு,
தன்மொழிமீது பற்றுக்கொண்டவர்களிடமிருந்து
பொற்கிழிகளைப் பெற்றுக்கொண்டு,
பிறமொழி ஒன்றைக்கூட படித்திடாமலேயே
தங்கள் தாய்மொழி மட்டுமே தலைச்சிறந்ததென
போற்றுபவர்களும் பீற்றுபவர்களும்
சுயநலவாதிகள் ஆகிவிட்டனர்..

கவிதைகளை வாசிப்பதால் மட்டுமே,
இணையங்களில் எழுதுவதால் மட்டுமே,
தங்களைத்தாமே கவிஞர்கள் என்று
புகழ்பாடி நடப்பவர்களும்,
அனைத்து விஷயங்களிலும் கருத்துக்களைக் கூறி
அறிவாளிகள் என தங்களைக் காட்டிக்கொள்பவர்களும்
எழுத்துப் பைத்தியங்கள் ஆகிவிட்டனர்..

அதனால் எதையும் எழுதாத நான்

இன்றும் கவிஞனாகவே இருக்கிறேன்.!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post