Monday, 18 July 2016

பஷீர் நினைவுகள் (17-7-16) நன்றிநேற்று (17-7-2016) மாலையில் டிஸ்கவரி புக் பேலசுடன் இணைந்து திரைப்பட இலக்கியச் சங்கமம் சார்பில் பஷீர் நினைவரங்கம் என்ற பெயரில் ஒரு நிகழ்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் பெருமையாகத்தான் இருக்கிறது.
இது வரை சினிமா சம்பந்தமான நிகழ்வுகளைத்தான் நடத்தி வந்திருக்கிறேன். ஆனால் நேற்று முதன்முதலாக ஒரு இலக்கியவிழாவை நடத்தியிருக்கிறேன். அதை வெற்றிபெறச்செய்த விருந்தினர்களுக்கும் வந்து சிறப்பித்த நண்பர்களுக்கும் இந்நேரத்தில் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்நிகழ்வின் முதல் பகுதியாக பஷீர் குறித்த ஒரு செய்திப்படம் (Basheer the Man) திரையிடப்பட்டது. பஷீரின் குரலிலேயே அவருடைய அனுபவங்களைப்பற்றி சொல்லக்கேட்பது உண்மையிலேயே ஒரு விருந்தாகத்தான் இருந்தது. படம் மலையாளத்தில் இருந்தாலும் ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் அனைவருக்கும் புரியும்படியாகவே இருந்தது. இருப்பினும் மலையாளத்தில் பஷீர் பேசும்போது (பஷீருக்கே உரித்தான நடையில் பேசும்போது) உருவாகும் ஒரு நகைச்சுவை உணர்வு முழுமையாக அனைவரிடமும் சென்று சேர்ந்ததா என்பதில் ஒரு சிறு சந்தேகம் இருந்தது. அந்த படத்தைப்பற்றி வெளிரங்கராஜன் ஸ்லாகித்து பேசியது, அந்த படத்தை எடுத்த இயக்குநருக்கு கிடைத்த ஒரு வாழ்த்தாகவே அமைந்து விட்டது.
படத்தைத்தொடர்ந்து ரோஹிணி அவர்கள் பஷீரைப்பற்றி பேசினார். கடந்த வாரம் இந்த நிகழ்வை நடத்துவதாக இருந்தேன். அதற்காக ரோஹிணியை அழைத்திருந்தேன். அப்பொழுதுதான் அவர் பஷீர் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்று தெரிந்தது. அன்று அவரால் வரமுடியாது என்பதால், அவர் இந்த நிகழ்வில் பேசியே ஆகவேண்டும் என்றுதான் நான் இந்தவாரத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தேன். அதை நியாயப்படுத்தும்படியாகவே இருந்தது அவருடைய பேச்சு.
பஷீரைப்பற்றி அவர் படித்ததையும், கேள்விப்பட்டதையும், பஷீர் எழுத்துக்களை படித்து அவர் உணர்ந்தவற்றையும் அழகாக எடுத்துரைத்தார். பஷீரை தன்னுடைய வாழ்வின் ஆசான்களில் ஒருவராக மதித்துவருவதை தன்னுடைய வார்த்தைகளில் உணர்த்தினார். பஷீருக்கு செய்யும் ஒரு அஞ்சலியாகவே அவருடைய பேச்சு அமைந்தது. ரோஹிணிக்கு மனமார்ந்த நன்றி!
அடுத்ததாக நண்பர் கிருஷ்ணபிரபு பேசினார். அவர் நிறைய குறிப்புகளை எடுத்துவந்து ஒரு ஆழமான உரையை நிகழ்த்தினார். கூடவே ஒரு சிறு விவாதத்திற்கு விதையையும் போட்டுவிட்டார். தவறான மொழிபெயர்ப்புகள் பற்றி ரோஹிணி ஒரு கருத்தைச் சொல்ல, அதை பின்பற்றித்தான் கிருஷ்ணபிரபு இந்த விவாதத்தை ஆரம்பித்தார். ஆனால் அவர் ஏற்கனவே குறிப்புகள் எடுத்துவைத்து, அவற்றை விளக்கமாக பேசியதிலிருந்து ரோஹிணி அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி அப்படி சொல்லவில்லையென்றாலும் இவர் இதைத்தான் பேசியிருப்பார் என்றே நினைக்கிறேன்!
கிருஷ்ணபிரபு பஷீரின் படைப்புகளைப்பற்றி சொல்லியபடி, அதை ஒப்பிடுவது போல தமிழில் வந்த சிறுகதைத் தொகுப்புகள் பற்றி பேசினார். குறிப்பாக, எஸ்.ராமகிருஷணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் பற்றி, அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி, உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். சிறிதுநேரத்திற்கு பஷீர் நினைவரங்கம் எஸ்.ராமகிருஷ்ணனின் தொகுப்புக்கான விமர்சனக்கூட்டமாக மாறியதோ என்று ஒரு கணம் தோன்றியது. இந்த நிகழ்வில் இந்த அளவுக்கு மற்றொரு புத்தகத்தைப்பற்றிய விமர்சனம் தேவையற்றது என்று வருத்தப்படுவதா, அல்லது கிடைத்த வாய்ப்பில் அவர் தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டதைக் கண்டு சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை!
அனேகமாக அந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கூட்டம் யாராவது நடத்த வேண்டியிருக்கும். இல்லையேல், முகநூலில் சில நாட்களுக்கு பலருடைய கைகளிலும் இது ஒரு விவாதப் பொருளாக மாறிவிடும் என்றே தோன்றுகிறது. (அதன் அறிகுறி இன்றே தென்பட்டுவிட்டது.)
என்னதான் இருந்தாலும் கிருஷ்ணபிரபுவின் உரையில் பஷீரைப்பற்றிய பல நல்ல தகவல்களும் இருந்தன. கருத்துக்களும் இருந்தன. அவற்றிற்காக கிருஷ்ணபிரபுவிற்கு நன்றி!
சற்று தாமதமாக வந்தாலும் கிருஷ்ணபிரபுவைத் தொடர்ந்து திரு ஷாஜி பஷீரைப்பற்றிய ஒரு அழுத்தமான, ஆழமான உரையை நிகழ்த்தினார். ஷாஜியை நான் சந்திப்பது இதுதான் முதன்முறை. பஷீரைப்பற்றி பேசுவதற்கு யாரை கூப்பிடலாம் என்று யோசித்தபோது, இதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று மனதில் பட்ட ஒரு சிலநபர்களில் இவர் முக்கியமானவர். உடனே தொலைபேசி வழியாகவேதான் இவரை அழைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார்.
நான் நினைத்தபடியே அவருடைய பேச்சு இந்த நிகழ்விற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்வை முடித்து இன்னொரு நிகழ்விற்கு செல்லவேண்டும் என்பதால் அவர் தன்னுடைய உரையை சுருக்கிவிட்டார் என்பது தெரிந்தது. உண்மையில் அது ஒரு வருத்தமாகத்தான் இருந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக அவருடைய உரை அமைந்தது.
மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நேரடியாக தொடர்பு இருப்பதாலும், பஷீரைப்பற்றி முழுமையாக படித்தவர் என்பதாலும் அவருடைய உரை சிறியதே ஆயினும் அதில் நிறையவே தகவல்களும் கருத்துக்களும் இருந்தன. கூடவே சமகால நிலமைகளையும், பஷீர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலமைகளையும் ஒப்பிட்டு பேசியது, (குறிப்பாக அதற்கு உதாரணமாக பியூஷ் பற்றி சொல்லியது) வெகுசிறப்பு. ஷாஜிக்கு நன்றி!
துணை நின்று இந்நிகழ்வை நடத்த உதவிய வேடியப்பனுக்கு நன்றி!

நிகழ்வுக்கு வந்து வெற்றிபெறச்செய்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post