அன்புடையீர்,
திரைப்படத் துறையையும் இலக்கியத் துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வரும்
ஜனவரி மாதம் (2018) எட்டாவது ஆண்டுவிழாவை கொண்டாட இருப்பது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது.
தற்பொழுது நமது சங்கமத்தின் செயல்பாடுகளைப்பற்றி, எண்ணங்களைப்பற்றி, புதிய இலக்குகள் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும். சங்கமத்தின் பயன்களை அணைத்து நண்பர்களிடமும்
பரவலாக
கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக பல புதிய நிகழ்வுகளை நடத்த
திட்டமிட்டிருந்தேன். அத்துடன் இந்த எண்ணங்களை செயல் முறையில் எடுத்துக்காட்டும்
விதமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பணிகளையும் இதற்கு இணையாக தொடர்ந்து செய்து
வந்தேன்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள், சில இனிய நினைவுகள், பல கசப்பான
அனுபவங்கள் மற்றும் நண்பர்களும் நலம் விரும்பிகளும் கடந்த சில நாட்களாக தந்த அறிவுரைகள்
எல்லாம் சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தெளிவையும், தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும்
அளித்து, தற்பொழுது இந்த பணிகளை ஒன்றிணைத்து ஒரே திட்டமாக செய்து முடிக்கும் வழியை
ஏற்படுத்தியுள்ளது,
இதன்படி நமது சங்கமத்தின் அடுத்த நிகழ்வுகள் (வார சந்திப்பு,
கலந்துரையாடல், வகுப்புகள், ஆய்வரங்கம் போன்றவை) அனைத்தும் பொன்னியின் செல்வன்
படத்தின் திரைக்கதை அமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை முன் நிறுத்தியே நடத்தப்பட
உள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் நடக்க இருக்கும் சங்கமத்தின் எட்டாவது ஆண்டுவிழாவில்
இந்த பணிகளைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடும் விதமாக இந்த நிகழ்வுகள் இருக்கும்.
இந்த நிகழ்வுகதள் வழியாக திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்து பயணிக்கும் நண்பர்களை சந்திக்க நண்பர்கள், குழுக்கள், நிறுவனங்கள் என அனைவரிடமும் உதவியை நாடுகிறேன்.
இந்த புதிய இயக்கத்தில் ஒன்றிணைந்து பயணிக்க, திரைக்கதை அமைப்பிலும், படத்தயாரிப்பு பணிகளிலும் அறிவுரைகள் வழங்க,
தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, இணைந்து பணியாற்ற, கற்றுக்கொள்ள அனைத்து திரைப்பட மற்றும் இலக்கிய நண்பர்களையும் அழைக்கிறேன். குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை
நேசிக்கும் நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
வாருங்கள்.. திரைத்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவோம்!
அன்புடன்
கமலபாலா பா.விஜயன்
மேலும் விபரங்களுக்கு: www.filmfriendship.com அல்லது facebook/Kamalabala B Vijayan
நமது சங்கமத்தின் தற்பொழுதைய இலக்குகள்:
# தொழில்முறை திரைப்பட எழுத்தாளர்களை வளர்ப்பது..
# படம் எடுப்பதற்காக கற்றுக்கொள்வது மற்றும் கற்றுக்கொள்வதற்காக படம் எடுப்பது..
# கல்வி நிறுவனங்களையும் (மாணவர்கள்) திரைத்துறையையும் (படைப்பாளிகள்) இணைப்பது..
# ‘திரைக்கதை’ முதல் ‘திரை’ வரையில் அனைத்திற்கும் வழிகாட்டுவது மற்றும் ஒருங்கிணைப்பது..
# திட்டங்களுக்காக படைப்பாளிகளையும், படைப்பாளிகளுக்காக தயாரிப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்வது..
# திரைப்படம், ஊடகம் மற்றும் பதிப்பகத் துறைகளில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது..
# திரைப்படத் துறையில் வெற்றிபெறுவது எப்படி (பாகம் 1: திரைப்படம்- தயாரிப்பாளர்களின் கலை) – நூலில் சொன்ன கருத்துக்களை அனைவருக்கும்
அறிமுகம் செய்வது..
இது ஏற்கனவே திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் திரைத்துறையில் வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும் மட்டுமானதல்ல, திரைப்படத்தை விரும்பும் அனைவருக்குமானது!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post