Monday, 24 October 2016

முதல் புரவலர்



நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்துவதற்காக ஏற்கனவே சில நலம்விரும்பிகளும் நண்பர்களும் எனக்கு அவ்வப்போது உதவிசெய்திருக்கின்றனர். அவர்களை இச்சங்கமத்தின் புரவலர்களாகத்தான் நான் நினைத்து வருகிறேன்.
இருப்பினும் இந்த சங்கமத்தை நடத்துவதற்கு என்றும் அதற்காக புத்தகங்களை பதிப்பிக்கிறேன் என்றும் சொல்லி மற்றவர்களிடம் உதவி கேட்பது இதுதான் முதல் முறை.
முகநூலில் இந்த வேண்டுகோளை வைத்தேனே தவிர நேரடியாக யாரிடமும் இன்னும் கேட்கவில்லை. காரணம், வழக்கமாக என்னிடம் உள்ள தயக்கமும் கூச்சமும்தான். அதுவுமின்றி என்னுடைய படவேலைகளை ஆரம்பிப்பதற்கு இது தடையாகி மாறிவிடுமா என்ற குழப்பமும் இருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று (சனிக்கிழமை) டிஸ்கவரியில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன். அங்கு வந்திருந்த கீதாஞ்சலி பிரியதர்சினி அம்மா அவர்கள் என்னுடைய முகநூல் வேண்டுகோளை பார்த்ததாக குறிப்பிட்டு திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலைஎனும் புத்தகத்தை பதிப்பிக்க உதவியாக இருக்கட்டும் என்று ஒரு தொகையை தந்தார். தொகை சிறியதா பெரியதா என்பது இங்கே முக்கியமல்ல. இந்த தொகை தான் என்னுடைய தனிப்பட்ட நட்பு வட்டத்தைத் தாண்டிய ஒருவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் முதல் அன்பளிப்பு!
ஆகையால் இவர்தான் உண்மையில் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல் புரவலர்!
இவருடைய இந்த அன்பளிப்பால் இன்று நான் மிகவும் உற்சாகமாகி, தயக்கங்களையும் குழப்பங்களையும் விட்டுவிட்டு என்னுடைய படவேலைகளுக்கு இணையாக இந்த சங்கமத்தின் வேலைகளையும் தொடர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

இந்த உற்சாகத்தைத் தந்த முதல் புரவலர் கீதாஞ்சலி அம்மாவுக்கு நன்றிகள்!

Friday, 14 October 2016

திரைப்பட இலக்கியச் சங்கமம் - வேண்டுகோள்

அன்புடையீர்,

திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கவேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்கவேண்டும் என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஐந்து வருடங்களைத்தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது.
இந்த சங்கமத்தின் லட்சியங்களை நிறைவேற்றவும், திரைத்துறைக்கு புதியதாக வருபவர்களுக்கும் வெற்றியைத் தேடுபவர்களுக்கும் வழிகாட்டவும், திரைக்கு வரும் அனைத்து படைப்புக்களையும் ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கவும், தயாரிப்பாளர்களையும் படைப்பாளிகளையும் பாராட்டவும், தொடர்ந்து மேலும் பல முயற்சிகளை எடுக்கவேண்டியிருக்கிறது. அதற்கான சிறப்புக் கூட்டங்களையும் மற்ற நிகழ்வுகளையும் பெரிய அளவில் நடத்தவேண்டியிருக்கிறது.
அதற்காக திரைப்படத்துறைக்கு மிகவும் தேவையான சில புத்தகங்களை திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் சார்பாக பதிப்பிக்க விரும்புகிறேன். அதன் முதல் படிதான் திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி: பாகம் 1 திரைப்படம்- தயாரிப்பாளர்களின் கலைஎன்ற புத்தகம்.
இந்த நூலை விற்பதால் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு திரைப்பட இலக்கியச் சங்கமத்தை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளேன். இதன் மூலமாக இந்த சங்கமத்தின் லட்சியங்களை எட்டமுடியும் என்று நம்புகிறேன்.
இந்த புத்தகத்தை நியாயமான விலையில் திரைத்துறைக்கு வரவிரும்பும் அனைவரிடமும், மாணவர்களிடமும், திரைத்துறையில் வாய்ப்பைத் தேடி அலையும் திறமைசாலிகளிடமும் கொண்டுசேர்க்கும் விதமாக பதிப்பிக்க உங்களுடைய உதவியை நாடுகிறேன். 200க்கும் கூடுதலான பக்கங்களைக்கொண்ட இந்த புத்தகத்தை 100 ரூபாய் விலைக்கு விற்க விரும்புகிறேன்.
நண்பர்கள் ஒரு புத்தகத்திற்கு 100 ரூபாய்க்குமேல் விலை வழங்கினால், அந்த உயர்த்தொகை (ப்ரீமியம்) திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வளர்ச்சிக்கு பயன்படும். அப்படி உதவுபவர்கள் அனைவரும் இந்த சங்கமத்தின் புரவலர்களாகவும் மதிக்கப்படுவார்கள்.
இப்புத்தகத்தை அச்சிடுவதற்காக (முன்பதிவாக) 1000 ரூபாய்க்குமேல் உதவிசெய்யும் புரவலர்களின் பெயர்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படும்.
நண்பர்கள் அனைவரும் இந்த முயற்சியை வெற்றிபெறச்செய்து உதவுங்கள், ஒத்துழைப்பு தாருங்கள்.

--- கமலபாலா பா.விஜயன்

புத்தகங்களுக்கான தொகையை நேரிலோ அல்லது ‘B.Vijayan, SB a/c no: 602852861, Indian Bank, Saligramam Branch, IFSC code IDIB000S082’ என்ற வங்கிகணக்கிலோ செலுத்தலாம்.

திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி: பாகம் 1



திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி: பாகம் 1
திரைப்படம்- தயாரிப்பாளர்களின் கலை

திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி என்பதற்கு மட்டுமல்ல, திரைத்துறையை வெற்றிபெறச்செய்வது எப்படி என்ற கேள்விக்கும் பதிலைத் தேடும் ஒரு முயற்சி...
இந்தியசினிமாக்களை மட்டுமே அடிப்படையாக தொகுத்த கட்டுரைகள்...
இந்திய சினிமாவை, முக்கியமாக தமிழ் சினிமாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல வழிகாட்டும் கருத்துக்கள்...
திரைப்படம் மற்றும் திரைத்துறைபற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்ள உதவும் ஒரு அரிச்சுவடி...
திரைத்துறையில் வாய்ப்பைத்தேடி அலைந்துகொண்டிருக்கும் திறமைசாலிகளை சிந்திக்கவைத்து, அவர்களுக்கு வெற்றியின் பாதையை காண்பிக்கும் கைகாட்டி...
தயாரிப்பாளர்களைப்பற்றி மற்ற படைப்பாளிகளும் கலைஞர்களும் அறிந்திருக்க வேண்டிய, ஆனால் அறியமறந்த பல அடிப்படை விஷயங்களின் தொகுப்பு...
திரைப்படத்தை விரும்பும் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய, திரைத்துறையில் வெற்றிபெற விரும்பும் அனைவரும் தெரிந்திருக்கவேண்டிய கருத்துக்களின் முதல் தொகுப்பு...

தொடர்ந்து படிக்க:

திரைப்படம் தயாரிப்பளர்களின் கலை