Thursday, 8 October 2020

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 48

 



நாற்பத்தெட்டாம் அத்தியாயம்

நீர்ச் சுழலும் விழிச் சுழலும்

 

 

கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின.

வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது.

ஏதோ ஓர் அரிய பொருளை, இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, - அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான்.

"எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை, கற்பகக் கனியை,- என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?" என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார்.

மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜூவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.

ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள்.

மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள்.

இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.

தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.

இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்!

மேற்கூறிய ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் ஒத்திருந்தார்கள் அந்த நேரத்தில் நம் வல்லவரையனும் குந்தவை தேவியும். இப்பூவுலகில் தாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த நிமிஷத்துக்காகவே, இந்த சந்திப்புக்காகவே,  என்பதை அவர்களுடைய உள்ளுணர்ச்சி உணர்த்தியது.

ஆனால் ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் போலின்றி இவர்கள் நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் அல்லவா? ஆகையால் தங்களுடைய பரஸ்பர அந்தஸ்தில் இருந்த வேற்றுமையை அவர்களால் மறக்க முடியவில்லை. முழுதும் உணர்ச்சி வசப்பட்டு மனத்தைக் கட்டுக்கடங்காமல் அவர்கள் விட்டுவிடவில்லை.

ஒரு கணம் ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணோடு கண் சேர்வதும், அடுத்த கணத்தில் தங்கள் கண்களைத் திருப்பி அக்கம் பக்கத்திலிருந்த பூ, மரம், பட்டுப் பூச்சி, ஓடை முதலியவற்றைப் பார்ப்பதுமாயிருந்தார்கள்.

ஈசான சிவபட்டர் தொண்டையை கனைத்த பிறகுதான் இருவரும் ஏதோ ஒரு முக்கியமான காரியம் பற்றி இங்கே சந்திக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள்.

"நீர் என்னை தனிமையில் பார்க்க வேண்டுமென்று ஈசான பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?" என்று குரலை கடுமைப்படுத்திக் கொண்டு இளையபிராட்டி வினவினாள்.

அந்தக் குரலின் கடுமையும் அதிகார தோரணையும் வந்தியத்தேவனை நிமிர்ந்து நிற்க செய்தன.

"தாங்கள் யார் என்று தெரிந்தால் அல்லவா தங்களது கேள்விக்கு விடை சொல்லலாம்? ஈசான பட்டர் என்னை தவறான இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரோ என்று ஐயுறுகிறேன்!" என்றான் அந்த வீர வாலிபன்.

"எனக்கும் அவ்வித சந்தேகம் உண்டாகிறது. நீர் யாரைப் பார்க்க விரும்பினீர்?"

"சோழர் தொல்குலத்தின் மங்காமணி விளக்கை, சுந்தர சோழ மன்னரின் செல்வ திருமகளை, ஆதித்த கரிகாலருக்கு பின் பிறந்த சகோதரியை, அருள்மொழிவர்மரின் அருமை தமக்கையை, இளையபிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென்று ஈசான சிவபட்டரிடம் சொன்னேன்......"

குந்தவைப் பிராட்டி புன்னகை பூத்து, "அவ்வளவு பெருமையையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பவள் நான் தான்!" என்றாள்.

"அப்படியானால் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நான் பார்த்த நாரீமணி தாங்கள் இல்லைதானே?" என்றான் வல்லவரையன்.

ஆமாம், ஆமாம்! அந்த இரண்டு இடத்திலும் அவ்வளவு மரியாதைக் குறைவாகத் தங்களிடம் நடந்து கொண்டவளும் நானேதான். அந்த நாகரிகமில்லா மங்கையை மறுபடியும் இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்போம் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்!"

"மறுபடியும் சந்திப்பதாக சொல்வது பொருத்தமில்லை, தேவி!"

"ஏன்?"

"விட்டுப் பிரிந்திருந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனத்தை விட்டு ஒரு கணமும் அகலவில்லை......."

"தொண்டை மண்டலத்தார் இவ்வளவு சமத்காரமாகப் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

"எல்லாப் பெருமையையும் சோழ நாட்டிற்கேதான் கொடுப்பீர்களாக்கும். வேறு நாடுகளுக்கு ஒரு பெருமையும் தர மாட்டீர்கள் போலிருக்கிறது."

"ஆம்; என்னிடம் அந்த குற்றம் இருப்பது உண்மைதான். உமக்கு எங்கள் சோழ நாட்டைப் பிடிக்கவில்லையாக்கும்!"

"பிடிக்காமல் என்ன? நன்றாய்ப் பிடித்திருக்கிறது. ஆனால் இச்சோழ நாட்டில் இரண்டு பெரும் அபாயங்கள் இருக்கின்றன. அவற்றை எண்ணினாலே எனக்குப் பயமாயிருக்கிறது.....!"

"சோழ நாட்டு வீரர்களின் வாளும் வேலும் அபாயகரமான ஆயுதங்கள் தான்! அயல் நாட்டவர்கள் இங்கே ஜாக்கிரதையாகவே வர வேண்டும். முக்கியமாக, ஒற்றர் வேலை செய்வதற்கென்று வருவோர்....."

"இளவரசி! அந்த இரு அபாயங்களை நான் குறிப்பிடவில்லை. வாளும் வேலும் என்னிடமும் இருக்கின்றன. அவற்றை உபயோகிப்பதற்கும் நான் நன்கு அறிவேன்...."

"உமது வேலின் வன்மையைத்தான் அரிசிலாற்றங்கரையில் அன்று பார்த்தேனே? செத்துப் போன முதலையை உமது வேல் எத்தனை வேகமாய்த் தாக்கியது? ஒரே தாக்குதலில் உள்ளே அடைந்திருந்த பஞ்சையெல்லாம் வெளிக் கொண்டு வந்து விட்டதே?"

"அம்மணி! சோழ நாட்டு மாதரசிகள் செத்த முதலையைக் கண்டு பயந்து சாகும் வீர நாரீமணிகள் என்பதை நான் அறியேன். சோழ நாட்டு வீரர்கள் செத்த முதலையைத் தாக்கும் சுத்த வீரர்கள் என்றும் எனக்குத் தெரியாது. உயிருள்ள முதலையாக்கும் என்று எண்ணி வேலை எறிந்தேன். அது என் தவறும் அன்று; என் வேலின் தவறும் அன்று!......"

"அந்த அசட்டு முதலையின் தவறுதான்! வாணர் குலத்தில் பிறந்த வீர வந்தியத்தேவர் வேலோடு வரும் வரையில் காத்துக் கொண்டிராமல் முன்னதாகவே செத்துப் போய்விட்டதல்லவா? அதற்கு நன்றாய் வேணும் இந்த அவமானம்...! வேறு எந்த இரு அபாயங்களைப் பற்றிச் சொன்னீர்?"

"இந்தச் சோழ நாட்டு நதிகளில் புது வெள்ளம் வரும்போது உண்டாகும் சுழல்கள் அபாயமானவை! அவற்றை ஒரு போதும் நம்பவே கூடாது. என்னைத் திண்டாடித் திணறும்படி செய்து விட்டன!"

"வெள்ளச் சூழலில் நீர் எப்படி அகப்பட்டுக் கொண்டீர்? தண்ணீரில் காலையே வைக்க மாட்டீர் என்றல்லவா உம்மைப் பார்த்தால் தோன்றுகிறது?"

"வேதாளத்துக்கு வாழ்க்கைப் பட்டு முருங்கை மரத்தில் ஏற மாட்டேன் என்றால், முடிகிற காரியமா? சோழ நாட்டுக்கு வந்த காரணத்தினால், நதி வெள்ளத்தில் முழுகிச் சுழலிலும் சிக்கும்படியாகி விட்டது! என்னோடு துணைக்கு வந்த ஒரு அசட்டுப் பிள்ளையின் பிடிவாதத்தினால் அப்படி நேர்ந்தது! கேளுங்கள், தேவி! அந்தப் பிள்ளை ஒரு சின்னஞ் சிறிய பொய் சொல்ல முடியாது என்றான். அதனால் வந்த வினை..."

"நீர் சொல்லுவது புதிராக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நல்லது."

"சொல்கிறேன். தங்களுடைய அருமை சகோதரரின் ஓலையுடன் தூதனாக வந்த என்னை தஞ்சைக் கோட்டைத் தலைவர் சிறிய பழுவேட்டரையர் 'ஒற்றன்' என்று குற்றஞ்சாட்டிப் பிடித்து வர ஆட்களை ஏவினார்.

வந்த காரியம் பூர்த்தியாவதற்குள் சிறைப்பட நான் விரும்பவில்லை. ஆகையால் நான் தஞ்சையில் தங்கியிருந்த வீட்டுச் சிறுவனை வழிகாட்ட அழைத்துக் கொண்டு கிளம்பினேன்...."

"தஞ்சை நகரில் யாருடைய வீட்டில் தங்கினீர்?"

"கோட்டைக்கு வெளியிலே பூக்காரப் பெண்மணி ஒருத்தியின் வீட்டில் தங்கினேன். அந்த அம்மாள் ஊமை."

"ஓகோ! அவளுடைய பெயர்?"

"அந்த அம்மாளின் பெயர் தெரியாது; ஆனால் அவளுடைய பிள்ளையின் பெயர் மட்டும் எனக்குத் தெரியும். அவன் பெயர் சேந்தன் அமுதன்....."

"நான் நினைத்தது சரிதான்; மேலே சொல்லுங்கள்!"

"என் குதிரை மேல் அச்சிறுவனையும் ஏற்றி கொண்டு இந்தப் பழையாறை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அதற்குள் பழுவேட்டரையரின் ஆட்கள் சிலர் எங்களை நெருங்கி வந்து விட்டார்கள். நான் வந்த காரியம் முடிவதற்குள் அவர்களிடம் பிடிபட விரும்பவில்லை. குடமுருட்டி ஆறு வந்ததும் அச்சிறுவனிடம், 'நான் இங்கே இறங்கிக் கொள்கிறேன், தம்பி! நீ பாட்டுக்கு குதிரையை விட்டுக் கொண்டு போ! உன்னை நான்தான் என்று அவர்கள் தொடர்ந்து துரத்தி வருவார்கள்.

உன்னைப் பிடித்த பிறகு ஏமாறுவார்கள்! நான் எங்கே என்று அவர்கள் கேட்டால் ஆற்றில் விழுந்து முழுகிப் போய் விட்டதாகச் சொல்!" என்றேன். அந்தப் பையனோ அரிச்சந்திரனுடைய சந்ததியில் வந்தவன் போலிருக்கிறது. 'நீங்கள் முழுகாத போது எப்படி முழுகி விட்டதாகப் பொய் சொல்லுவேன்?' என்றான்.

அந்தப் பிள்ளை பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாமலிருக்கும் பொருட்டு, அவனை குதிரையில் சேர்த்துக் கட்டி விட்டு, நான் நதியில் குதித்து முழுகி விட்டேன். அம்மம்மா! இந்த சோழ நாட்டு நதிகளில், அதுவும் கரை ஓரங்களில், எப்பேர்ப்பட்ட நீர்ச் சுழல்கள்! அவற்றில் அகப்பட்டுக் கொண்டு நான் பெரிதும் திண்டாடிப் போனேன்.

கடைசியில், கரை ஓரத்தில் இருந்த மரத்தின் வேர் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கரையேறி உயிர் பிழைத்து வந்தேன். தேவி! நீர்ச் சுழலில் நான் அகப்பட்டுக் கொண்டு சுழன்று சுழன்று மதி மயங்கி மூச்சு திணறி கஷ்டப்பட்ட போது என்ன கண்டேன், எதை நினைத்துக் கொண்டேன் என்று எண்ணுகிறீர்கள்?'

"நான் எவ்விதம் அறிவேன்? ஒருவேளை கஜேந்திர மோட்சத்தை நினைத்துக் கொண்டிருக்கலாம்...."

"இல்லை, இல்லை; என்னைப் போலவே அந்த நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடிய சில கயல் மீன்களை கண்டேன். அந்தக் கயல் மீன்கள் இந்த சோழ நாட்டுப் பெண்களின் கண்களை நினைவூட்டின. நதியின் நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவனாவது எப்படியோ தப்பிப் பிழைக்கலாம்; ஆனால் இந்த சோழ நாட்டுப் பெண்களின் விழிச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவன் ஒரு காலும் தப்பிப் பிழைக்க முடியாது என்று எண்ணிக் கொண்டேன்!...."

"இம்மாதிரி பெண்களைக் குற்றம் கூறி பழி சொல்வதில் சிலருக்கு ஒரு பெருமை; தாங்கள் செய்யும் தவறுக்குப் பெண்களின் மீது குற்றம் சொல்வது ஆண் பிள்ளைகளின் வழக்கம்..."

"அந்த வழக்கத்தைத்தான் நானும் கைப்பற்றினேன். அதில் என்ன தவறு?" என்றான் வந்தியத்தேவன்.

அச்சமயம் அரண்மனைக்குள்ளேயிருந்து இனிய குழலோசை கேட்டது. அதை தொடர்ந்து தண்டை சிலம்புகளின் கிண்கிணி ஒலியும், மத்தளத்தின் முழக்கமும் கலந்து வந்தன.

பின்னர், இளம் பெண்களின் இனிய குரல்கள் பல சேர்ந்து ஒலித்தன. சிலப்பதிகாரக் காவியத்தில் உள்ள பின்வரும் ஆய்ச்சியர் குரவைப் பாடலைப் பாடினார்கள்:--

"கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்

இன்றுநம் ஆனுள்வருமேல் அவன் வாயில்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்

எல்லைநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்

முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!"

பாடல் முடியும் வரையில் குந்தவையும் வந்தியத்தேவனும் அதன் இனிமையில் ஈடுபட்டு தம் வசமிழந்து நின்றார்கள். மறுபடியும் வாத்திய முழக்கத்துடன் ஆடல் தொடங்கியதற்கு அறிகுறியாகத் தண்டைச் சதங்கைகளின் ஒலி எழுந்தது.

"அரண்மனையில் குரவைக் கூத்து நடக்கிறது போலும்! கடம்பூர் மாளிகையில் குரவை கூத்து ஒன்று பார்த்தேன். அது முற்றும் வேறுவிதமாயிருந்தது!" என்றான் வல்லவரையன்.

"ஆம்; என் தோழிகள் குரவை கூத்துப் பயில்கிறார்கள். சீக்கிரத்தில் என்னைக் காணாமல் தேடத் தொடங்கி விடுவார்கள். தாங்கள் வந்த காரியம் என்ன?" என்று இளைய பிராட்டி குந்தவை தேவி கேட்டாள்.

"இதோ நான் வந்த காரியம்; தங்கள் தமையனாரின் ஓலை; எத்தனையோ அபாயங்களுக்கு தப்பி, நீர்ச் சுழல்கள் - விழிச் சுழல்களிலிருந்து காப்பாற்றி, இதைக் கொண்டு வந்தேன்!" என்று வல்லவரையன் கூறி ஓலையை எடுத்து நீட்டினான்.


Sunday, 4 October 2020

பொன்னியின் செல்வன் பாகம் 1 - 47

 



நாற்பத்தேழாம் அத்தியாயம்

ஈசான சிவபட்டர்

 

 

ஆழ்வார்க்கடியான் அரசிளங்குமரியை பார்த்துவிட்டு அவனுடைய தமையனார் ஈசான சிவ பட்டரின் வீட்டுக்கு சென்றான். அவருடைய வீடு வடமேற்றளி சிவன் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அரண்மனையிலிருந்து அரைக் காத தூரம் இருக்கும்.

சோழ மாளிகையிலிருந்து வடமேற்றளி ஆலயத்துக்குப் போனால், பழையாறு நகரின் விஸ்தீரணத்தையும் அதன் மற்றச் சிறப்புக்களையும் ஒருவாறு அறியலாம்.

கிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒருவாறு அடங்கி விட்டன என்பதை ஆழ்வார்க்கடியான் பார்த்துக் கொண்டு போனான். வீட்டுப் பகுதிகளின் வழியாக சென்றபோது ஸ்திரீகள் அங்கங்கே வீட்டு ஓரங்களில் கூடி நின்று கோபமாக பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டு போனான்.

அந்த ஸ்திரீகள் அனைவரும் தத்தம் கணவர்கள் அல்லது புதல்வர்களின் கழுத்தில் வஞ்சிப் பூமாலை அணிவித்து உற்சாகமாக ஈழத்துப் போர் முனைக்கு அனுப்பியவர்கள். நாலு திசைகளிலும் சோழ சைன்யங்கள் நடத்திய வீரப் போர்களில் யாராவது ஒரு வீரன் அந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சென்று வீர சொர்க்கம் அடையாமலிருந்தது கிடையாது.

அப்படிப்பட்ட பெண்கள் இப்போது அதிருப்தியுடன் முணுமுணுத்துப் பேசிக் கொண்டிருந்ததைத் திருமலையப்பன் பார்த்தான். இதெல்லாம் என்ன விபரீதத்தில் போய் முடிகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டே சென்றான்.

வடமேற்றளி கோயிலை அவன் அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. அப்பர் பெருமானால் பாடப் பெற்ற கோயில் இதுதான். அந்த மகானுடைய காலத்தில் இக்கோயிலைச் சுற்றிச் சமணர்கள் செயற்கைக் குன்றுகளை எடுத்து, அந்தக் குன்றுகளில் முழைகளை அமைத்திருந்தார்கள்.

அப்படி ஏற்பட்ட செயற்கை மலைக் குகைகளில் திகம்பர சமணர்கள் உட்கார்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்கள். இதை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக இன்றைக்கும் பழையாறைக்கு அருகில் முழையூர் என்று ஓர் ஊர் இருக்கிறது.

அப்பர் பெருமான் பழையாறை ஸ்தல மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தபோது சமணர்களின் முழைகள் சிவன் கோயிலை அடியோடு மறைத்திருந்தன. இதை ஆத்ம ஞானத்தினால் அறிந்த அப்பர் மனம் வருந்தினார். பல்லவர்களின் பிரதிநிதியாக அச்சமயம் சோழ நாட்டைப் பரிபாலித்து வந்த சிற்றரசனிடம் முறையிட்டார்.

அரசன் அந்தச் செயற்கை முழைகளில் ஒரு பகுதியை இடித்து அப்புறப்படுத்தினான்.உள்ளே சிறிய சிவன் கோயில் இருப்பது தெரிந்தது. அப்பர் பரவசமடைந்து பாடினார்.

அந்தக் கோயில் பிற்பாடு சோழ மன்னர்களால் சிறப்படைந்து கற்றளியாகக் கட்டப்பட்டது. ஆனால் இன்னமும் கோயிலைச் சுற்றிலும் முழைகள் சூழ்ந்து பிராகாரச் சுவர் போல் அமைந்திருந்தன. கோயிலுக்குள் பிரவேசிப்பதற்கு கோபுர வாசல் ஒன்றுதான் இருந்தது; வேறு வாசலே கிடையாது.

கோபுர வாசல் வழியாகக் கோயில் பிராகாரத்துக்குள் சென்று, ஈசான சிவபட்டரின் வீட்டைச் சுலபமாக அடையலாம். இல்லாவிட்டால் சுற்றி வளைத்துக் கொண்டு போக வேண்டும்.

இப்படித் தன் தமையனாரின் வீட்டைக் குறுக்கு வழியில அடைவதற்காக திருமலை கோபுர வாசலுக்குள் நுழைந்தான். உள்ளே சுவாமி சந்நிதியில் சில அடியார்கள் நிற்பது தெரிந்தது. அவர்கள் கிருஷ்ணனைப் போலவும் பலராமரைப் போலவும் வேஷந்தரித்து வந்த கோஷ்டியார் என்று தோன்றியது.

"ஆகா! இவர்கள் எங்கே இங்கு வந்து சேர்ந்தார்கள்!" என்று அவன் எண்ணமிடுவதற்குள், ஈசான சிவபட்டர் கோயிலுக்குள்ளேயிருந்து அவசரமாக வெளியேறி வந்தார். அப்போதுதான் கோபுர வாசலுக்குள் நுழைந்திருந்த திருமலையின் கையைப் பிடித்துப் பரபரவென்று வெளியில் இழுத்துச் சென்றார்.

"அண்ணா! இது என்ன?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"சொல்லுகிறேன், திருமலை! இனிமேல் நம்முடைய உறவெல்லாம் கோவிலுக்கு வெளியே இருக்கட்டும். நீ பதிதன்; சிவ நிந்தனை செய்யும் சமயப் பிரஷ்டன்; இந்தச் சிவாலயத்துக்குள் நீ அடியெடுத்து வையாதே! தெரிகிறதா? நானும் எத்தனையோ பொறுத்திருந்தேன்.

இன்றைக்குப் பெரிய மகாராணியின் முன்னால் நீ பேசியதை என்னால் சகிக்க முடியவில்லை. வீட்டுக்கு வேண்டுமானால் வந்து உன் பெரிய வயிற்றை நிரப்பிக் கொண்டு போ! ஆனால் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்காதே! அடி வைத்தால் நான் சண்டேசுவர நாயனார் ஆகி விடுவேன்!"

இவ்வாறு சொல்லி ஈசான சிவபட்டர் திருமலையின் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளி விட்டு, கோயில் கதவைப் படார் என்று சாத்தினார். "அண்ணா! அண்ணா!....." என்று திருமலை ஏதோ சொல்ல ஆரம்பித்ததை ஒருகணமும் காது கொடுத்துக் கேட்காமல் கோவில் கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு போய் விட்டார்.

"ஓகோ! அப்படியா சமாசாரம்?" என்று ஆழ்வார்க்கடியான் முணுமுணுத்துக் கொண்டான். சற்று நேரம் அங்கேயே நின்றான். பிறகு, அச்சிவனார் கோவிலை, சமணர் முழைகள் உட்பட, இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான்.

வலப்புறமாய் சென்றால் பிரதட்சிணம் செய்ததாகி விடும் என்ற வேண்டுமென்றே இடதுபுறமாகச் சுற்றி வந்தான். வட்ட வடிவமாக அமைந்திருந்த செய்குன்றுகளில் சமணர் முழை வாசல்கள் எல்லாம் நன்கு அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான்.

பின்னர், ஈசான சிவபட்டரின் வீடு சென்றான். வேடிக்கை வேடிக்கையாகப் பேசும் திருமலையிடம் பட்டரின் மனையாளுக்கு மிக்க பிரியம். அந்த அம்மாளிடம் வழக்கத்தை விட வேடிக்கையாகப் பேசி, வயிறு நிறையச் சிவன் கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு, வாசல் திண்ணையில் வந்து படுத்தான்.

முதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது. அவனுக்கு எதிர்த் திசையில் சில குதிரைகள் வேகமாக வரும் சப்தம் கேட்டுப் பக்கத்தில் அடர்த்தியாக இருந்த மூங்கில் புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான்.

முதலில் வந்த குதிரை தறிகெட்டு ஓடிவருவது போல் ஓடி வந்தது. அது சொட்ட சொட்ட நனைந்திருந்தது; வியர்வையினாலா, நதி வெள்ளத்தில் முழுகி வந்ததினாலா என்று தெரியவில்லை. அக்குதிரையின் பேரில் ஒரு சிறு பிள்ளை உட்கார்ந்திருந்தான். அவனை குதிரையோடு சேர்த்து கட்டியிருந்தது.

அந்தப் பிள்ளையின் முகத்தில் பீதியும், அத்துடன் ஓர் உறுதியும் சேர்ந்து காணப்பட்டன. சற்றுப் பின்னால் இன்னும் நாலைந்து குதிரைகள் வந்தன. அவற்றின் மீது வேல் பிடித்த வீரர்கள் வந்தார்கள். சீக்கிரத்தில் பிடித்து விடுவார்கள் என்று தோன்றியது.

அவர்களில் ஒருவன் தன்னுடைய வேலாயுதத்தைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து முன்னால் வந்த குதிரை மேல் எறிவதற்குக் குறி பார்த்தான். இன்னொருவன் அதைத் தடுத்தான்.

அச்சமயத்தில் அந்தப் பிள்ளை அடர்ந்த மூங்கில் புதர்களுக்குக் கீழே போக வேண்டியிருந்தது. சற்று வளைந்து தாழ்ந்திருந்த மூங்கில் மரக்கிளை ஒன்று அவனுடைய தலை மயிரில் சிக்கிக் கொண்டது. குதிரை முன்னால் இழுக்கவும் அந்தப் பிள்ளையின் கதி என்ன ஆகுமோ என்று இருந்த நிலையில் பின்னால் வந்தவர்கள் அக்குதிரையை வந்து பிடித்துக் கொண்டார்கள்.

குதிரை மீது வைத்துக் கட்டியிருந்த பிள்ளையைப் பார்த்து வியப்பும் திகைப்பும் கோபமும் அடைந்தார்கள். ஏதோ அவனைக் கேட்டார்கள். அவன் தட்டுத் தடுமாறி மறுமொழி சொன்னான். விவரமாக ஆழ்வார்க்கடியான் காதில் விழவில்லை.

"அவன் எங்கே?" "அவன் எங்கே?" என்று அடிக்கடி பலமுறை கேட்ட கேள்வி காதில் விழுந்தது. அந்த இளம்பிள்ளை "ஆற்றோடு போய் விட்டான்!" "வெள்ளத்தில் விழுந்து விட்டான்!" என்று விம்மி அழுது கொண்டே சொன்னதும் காதில் விழுந்தது. பிறகு அவ்வீரர்கள் அந்தப் பையனையும் குதிரையையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையோடு போய் விட்டார்கள்.

இந்தச் சம்பவத்தின் பொருள் என்னவென்பது திருமலையப்பனுக்கு அச்சமயம் விளங்கவில்லை. இப்போது கொஞ்சம் விளங்குவது போல் தோன்றியது.

இதற்கிடையில், அந்த வீதி நாடக கோஷ்டியின் நினைவும் அவனுக்கு வந்தது. முக்கியமாக, கம்ஸன் வேஷம் தரித்து, மரப் பொம்மை முகத்தினால் சொந்த முகத்தை மறைத்துக் கொண்டிருந்தவனின் நடை உடை பாவனைகளும், குரலும் நினைவு வந்தன. முன்னம் கேட்டது போல் தொனித்த அக்குரல் யாருடைய குரல் என்பது பற்றியும் விளக்கம் ஏற்படத் தொடங்கியது.

இரவு அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு ஈசான சிவபட்டர் தம் இல்லத்துக்கு வந்தார். வாசல் திண்ணையில் ஆழ்வார்க்கடியான் படுத்திருப்பதைப் பார்த்தார்.

"திருமலை! திருமலை!" என்று கோபக் குரலில் கூப்பிட்டார்.

திருமலை நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகப் பாசாங்கு செய்தான்.

வீட்டுக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டு பட்டர் உள்ளே போனார். தமது மனைவியாருடன் அவர் சண்டை பிடிக்கிற தோரணையில் பேசியது அரைகுறையாக திருமலையின் காதில் விழுந்தது. தன்னைப் பற்றித்தான் சண்டை என்பதைத் திருமலை தெரிந்து கொண்டான்.

காலையில் எழுந்ததும் ஈசான சிவபட்டர் திருமலையிடம் வந்து, "மறுபடி நாடு சுற்ற எப்போது புறப்படுகிறாய்?" என்று கேட்டார்.

"தங்கள் கோபம் தணிந்த பிறகு புறப்படுவேன் அண்ணா!" என்றான்.

"இனி என்னை 'அண்ணா' என்று கூப்பிடாதே. இன்று முதலாவது நான் உன் தமையனும் அல்ல; நீ என் தம்பியும் அல்ல. நீ சிவத்துவேஷி; நீசன்; சண்டாளன்..."

பட்டரின் மனைவி திருமலைக்காகப் பரிந்து, "எதற்காக இப்படியெல்லாம் அவனைச் சபிக்கிறீர்கள்! இத்தனை நாளும் சொல்லாததை அவன் இப்போது என்ன புதிதாகச் சொல்லி விட்டான்! உங்களுக்குத்தான் சிவபக்தி ரொம்ப அதிகமாக முற்றி விட்டது!" என்றாள்.

"உனக்கு ஒன்றும் தெரியாது! அவன் நேற்று பெரிய மகாராணியின் முன்னிலையில் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா? 'சுடுகாட்டில் சாம்பரைப் பூசிக் கொண்டு திரியும் பரமசிவனுக்குக் கோவில் என்னத்திற்கு!' என்று கேட்டான். என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. மகாராணி இராத்திரியெல்லாம் தூங்கவேயில்லையாம்!"

"இனிமேல் அப்படியெல்லாம் பேச மாட்டான். நான் புத்தி சொல்லித் திருத்தி விடுகிறேன். அவனிடம் நல்ல வார்த்தையாகச் சொன்னால் கேட்கிறான்!" என்றாள்.

"நல்ல வார்த்தையும் ஆயிற்று; பொல்லாத வார்த்தையும் ஆயிற்று. அவன் இராமேசுவரத்துக்கு உடனே போகட்டும். இராமர், பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட சிவலிங்கத்தை இவனும் பூஜை செய்து விட்டு வரட்டும். அதுதான் இவனுக்குப் பிராயச்சித்தம். அப்படிச் செய்யும் வரையில் நான் இவன் முகத்திலேயே விழிக்க மாட்டேன்!" என்றார்.

திருமலையின் உதடுகள் துடித்தன. வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுப்ப ற்குத்தான். ஆனால் பேசினால் காரியம் கெட்டுவிடும் என்று பொறுமையைக் கடைப்பிடித்தான்.

பட்டரின் பத்தினி இச்சமயத்தில் மறுபடியும் தலையிட்டு, "அதற்கு என்ன? இராமேசுவரத்துக்குப் போக சொன்னால் போகிறான். அவனுடன் நாமும் போகலாம். இத்தனை நாள் ஆகியும் நமக்குந்தான் குழந்தை பிறக்கவில்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன பாவம் செய்தோமோ, என்னமோ...? திருமலை! எல்லாருமாக இராமேசுவரத்துக்குப் போகலாமா?" என்று கேட்டாள்.

அவர்கள் இரண்டு பேரையும் சிவபட்டர் முறைத்துக் கோபமாகப் பார்த்து விட்டுப் போய்விட்டார்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஈசான பட்டர் திரும்பி வந்து திருமலையிடம் சாந்தமாகப் பேசினார்.

"தம்பி! 'கோபம் பாபம் சண்டாளம்' என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் கோபத்துக்கு இடம் கொடுத்து விட்டேன். உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே?" என்றார்.

"இல்லவே இல்லை!" என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.

"அப்படியானால் நீ இங்கேயே இரு! உச்சிகால பூஜையை முடித்துக் கொண்டு நான் வந்து விடுகிறேன். உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்லி யோசனை கேட்க வேண்டும். இங்கேயே இருக்கிறாய் அல்லவா? எங்கும் போய் விட மாட்டாயே?" என்றார்.

"எங்கும் போகவில்லை, அண்ணா! தங்களை விட்டு எங்கும் போவதாக உத்தேசமில்லை!" என்றான்.

பட்டர் போய் விட்டார். ஆழ்வார்க்கடியான் தனக்குத்தானே, "அப்படியா சமாசாரம்!" என்று சிலமுறை சொல்லிக் கொண்டான். பிறகு அண்ணியிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டான். செய்குன்றுகள் சூழ்ந்த வடமேற்றளிக் கோயிலை இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான். அவ்வப்போது ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே மறைந்து நின்று கொண்டான்.

அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சமணர் முழைகளில் ஒன்றின் வாசல் மெதுவாகத் திறந்தது. முதலில ஈசான சிவபட்டர் மூன்று பக்கமும் பார்த்துவிட்டு வெளியே வந்தார். பின்னால் இன்னொரு மனிதன் வெளிப்புறப்பட்டு வந்தான்.

ஆகா! இவன் யார்? முகம் தெரியவில்லையே? உடல் அமைப்பைப் பார்த்தால் கம்ஸன் வேடம் பூண்டிருந்தவன் மாதிரி இருக்கிறது! யாராயிருக்கும்? இதைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை. ஓஹோ! இதற்குத்தானா, இவ்வளவு கோபதாபம் மூடுமந்திரம் எல்லாம்!

முழையிலிருந்து வெளிப்பட்ட இருவரும் முன்னால் சென்றார்கள். ஆழ்வார்க்கடியான் ஒதுங்கிப் பதுங்கி மறைந்து பின்தொடர்ந்தான்.

சிறிது நேரம் நடந்ததும் ஓடைக் கரையை அடைந்தார்கள். சோழ மாளிகைக்குப் பின்புறத்தில் கடலைப் போல பரவி அலைமோதிக் கொண்டிருந்த ஓடையைத்தான். ஆனால் மாளிகைக்கு வெகு தூரம் மேற்கில் இருந்தது அத்துறை.

ஓடைக்கரையில் அடர்ந்த மரங்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்றின் பின்னால் ஆழ்வார்க்கடியான் நின்று இரண்டு கிளைகளுக்கு நடுவில் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

படகு ஒன்று அலையில் அலைப்புரண்டு மிதந்தது. அரண்மனைப் படகு மாதிரி தோன்றியது. படகுக்காரன் கரையில் நின்று கொண்டிருந்தான். பட்டரையும் அவருடன் வந்தவனையும் பார்த்ததும் அவன் படகைக் கரையோரமாக இழுத்து நிறுத்தினான்.

இருவரும் படகில் ஏறிக் கொண்டார்கள். படகு நீரில் போக ஆரம்பித்ததும் பட்டருடன் வந்த மனிதன் கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் முகம் பளிச்சென்று நன்றாய்த் தெரிந்தது. ஆழ்வார்க்கடியானுக்கு வியப்பு ஒன்றும் உண்டாகவில்லை. அவன் எதிபார்த்த மனிதன் தான் அவன். வீரநாராயணபுரத்திலும் கொள்ளிடத்துப் படகிலும் சந்தித்த அந்த வீர வாலிபன்தான்!

கம்ஸன் வேடம் பூண்டிருந்தவனும் அவனே என்பதில் சந்தேகமில்லை.

அவர்கள் படகில் ஏறி எங்கே போகிறார்கள்? அதையும் கண்ட பிடித்து விட வேண்டியதுதான்! அதாவது தன்னுடைய ஊகம் சரிதானா என்று பார்த்து விட வேண்டும்.

சோழ மாளிகைகள் பல வானளாவி நின்ற வீதியில் கடைசி மாளிகை ஒன்று பூட்டப்பட்டு கிடந்தது. அது சுந்தர சோழரின் முதன் மந்திரியான அநிருத்த பிரும்மராயரின் மாளிகை. முதன் மந்திரி அநிருத்தர் பாண்டிய நாட்டின் இராஜரீக நிர்வாகத்தை செப்பனிட்டு அமைப்பதற்காக மதுரை சென்றிருந்தார். அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள். ஆகையால் அவருடைய பழையாறை மாளிகை பூட்டப்பட்டுக் கிடந்தது.

ஆழ்வார்க்கடியான் இந்த மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் மாளிகைக் காவலர்கள் பயபக்தியுடன் வந்து நின்றார்கள். மாளிகையின் கதவைத் திறக்கும்படிப் பணித்தான். காவலர்கள் கதவைத் திறந்தார்கள். பிறகு அவன் கட்டளைப்படி வெளிப்பக்கம் சாத்திப் பூட்டினார்கள்.

மாளிகையின் மூன்று கட்டுக்களையும் கடந்து பின்புறத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தான். அத்தோட்டத்திலிருந்து நெருக்கமான மரஞ்செடிகளைப் பிளந்து கொண்டு கொடி வழி ஒன்று சென்றது. திருமலை அதில் புகுந்து சென்று சிறிது நேரத்தில் குந்தவை தேவியின் மாளிகைத் தோட்டத்தை அடைந்தான்.

கொடி வீடு ஒன்றில் மறைவான இடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு சிரமம் அவன் எடுத்துக் கொண்டது வீண் போகவில்லை.

காளிதாஸன் முதலிய மகா கவிகள் வர்ணிக்க வேண்டிய நாடக நிகழ்ச்சி ஒன்று அங்கே நடந்தது. நீரோடைக் கரையில் படகு வந்து நின்றது. அதிலிருந்து ஈசான பட்டரும் வந்தியத்தேவனும் இறங்கினார்கள். பிறகு நீர்த்துறையின் படிக்கட்டுகளின் வழியாக ஏறி வந்தார்கள்.

படிக்கட்டுகளுக்கு சற்றுத் தூரத்தில் தோட்டத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் இளையபிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள். படகில் வந்தவர்கள் நீர்த்துறையில் படிக்கட்டுகளில் ஏறி மேற்படிக்கு வந்ததும் இளையபிராட்டி குந்தவை தேவி எழுந்து நின்றாள்.

வந்தியத்தேவன் அப்போதுதான் அப்பெண்ணரசியின் திருமுகத்தைக் கூர்ந்து பார்த்தான். பார்த்தது பார்த்தபடியே நின்றான்.

அவனுக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் மத்தியில் ஒரு பூங்கொடி தன் இளந்தளிர்க்கரத்தை நீட்டி இடைமறித்து நின்றது.

அந்தக் கொடியில் ஓர் அழகிய பட்டுப் பூச்சி - பல வர்ண இறகுகள் படைத்த பட்டுப் பூச்சி - வந்து உட்கார்ந்தது. குந்தவை தன் பொன் முகத்தைச் சிறிது குனிந்து அந்தப் பட்டுப் பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். ஓடையில் அலைகள் ஓய்ந்து அடங்கின. பட்சி ஜாலங்கள் பாடுவதை நிறுத்தின. அண்ட பகிரண்டங்கள் அசையாது நின்றன.
பல யுகங்கள் சென்றன.